ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன? இல்லாமல் திருமணம் செய்யலாமா?

திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி: ரஜ்ஜு பொருத்தம் (Rajju Porutham) இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாதா? குறிப்பாகக் காதலிப்பவர்கள் இந்தக் கேள்வியை அதிகம் கேட்கிறார்கள்.

சுருக்கமான பதில்: மணமகன், மணமகள் இருவரின் நட்சத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவில் இருக்கக்கூடாது என்பதே அடிப்படை விதி. சில நூல்கள் ஆரோக – அவரோக ரஜ்ஜு போன்ற விதிவிலக்குகளைச் சொல்கின்றன. ஆனால் இந்தப் பொருத்தம் மாங்கல்ய பலத்துக்கானது என்பதால், இதில் சந்தேகத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதே ஜோதிடர் ஆஸ்ட்ரோ சரவணன் (Astro Saravanan) அவர்களின் 23 ஆண்டு அனுபவம். அதே நேரம், ரஜ்ஜு ஒன்று மட்டுமே திருமணத்தைத் தீர்மானிப்பதில்லை; இருவரின் சரியான முழு ஜாதகத்தையும் பார்த்தே இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

5 ரஜ்ஜு வகைகள்: சிரசு, கண்ட, நாபி, ஊரு, பாத ரஜ்ஜுவில் வரும் 27 நட்சத்திரங்கள்
5 ரஜ்ஜு வகைகளும் நட்சத்திரங்களும் — படத்தைத் தொட்டுப் பெரிதாக்கிப் பாருங்கள்

ரஜ்ஜு என்றால் என்ன? 5 ரஜ்ஜு வகைகள்

திருமணத்திற்காகப் பொருத்தம் பார்ப்பதன் நோக்கம், தம்பதிகள் இருவரும் நல்ல உடல்நலம், நல்ல மனநிலை, பரஸ்பர நம்பிக்கை, புரிதல், விட்டுக்கொடுத்தல், மரியாதை, எல்லாவற்றிற்கும் மேலாக அன்பும் பாசமும் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதுதான். 12 திருமணப் பொருத்தங்களில் ரஜ்ஜு பொருத்தம் ஒரு முக்கியமான பகுதி.

"ரஜ்ஜு" என்ற வார்த்தைக்குக் கயிறு என்று பொருள். ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களும் ஐந்து ரஜ்ஜுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மனித உடலின் ஐந்து பகுதிகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன: பாதம், தொடை, வயிறு, கழுத்து, தலை.

இருவரின் நட்சத்திரங்களும் எந்த ரஜ்ஜுவில் வருகின்றன என்று பார்ப்பதே இந்தப் பொருத்தம். இதற்கு எந்த ஜோதிடக் கணக்கும் தேவையில்லை; இருவரின் நட்சத்திரம் தெரிந்தால் போதும். கீழே உள்ள அட்டவணை உதவியுடன் ஒரு நிமிடத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

ரஜ்ஜுஉடல் பகுதிநட்சத்திரங்கள்
பாத ரஜ்ஜுபாதம்அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி
ஊரு ரஜ்ஜு (தொடை / கடி ரஜ்ஜு)தொடைபரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
நாபி ரஜ்ஜு (உதர ரஜ்ஜு)வயிறுகார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
கண்ட ரஜ்ஜுகழுத்துரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
சிரசு ரஜ்ஜு (சிரோ ரஜ்ஜு)தலைமிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

ஆதாரம்: காலப்பிரகாசிகை (Kalaprakasika), N. P. Subramania Iyer ஆங்கில மொழிபெயர்ப்பு, பக்கம் 75.

உதாரணம்

ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் என்ன ஆகும்?

இருவரும் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் என்ன பலன் என்பதற்குப் பாரம்பரிய நூல்கள் ஒரு விளக்கம் தருகின்றன; ஜோதிடர் ஆஸ்ட்ரோ சரவணன் (Astro Saravanan) தன் அனுபவத்திலிருந்து இன்னும் விரிவான விளக்கம் தருகிறார். நூல்கள் இவற்றை நிகழ்வுகளாகச் (ஆயுள், செல்வம், குழந்தை) சொல்கின்றன; ஜோதிடர் தன் ஆலோசனைகளில் கண்டது, அந்த ரஜ்ஜுவைக் குறிக்கும் கிரகங்களின் குணத்தால் தம்பதியரிடையே தோன்றும் போக்குகள். இரண்டும் முரண் அல்ல; ஒன்று பாரம்பரிய விதி, மற்றொன்று நடைமுறை அனுபவம். இரண்டையும் கீழே தருகிறோம்.

நூல்களில் சொல்லப்படுவது

இருவரும் இருந்தால்நூலில் சொல்லப்படும் பலன்
பாத ரஜ்ஜுஅடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம்; குடும்பத்தை விட்டுப் பிரிந்திருத்தல்
ஊரு ரஜ்ஜுசெல்வம், சொத்து இழப்பு
நாபி ரஜ்ஜுகுழந்தைகள் தொடர்பான சிரமங்கள்
கண்ட ரஜ்ஜுமனைவியின் ஆயுள் தொடர்பான அச்சம்
சிரசு ரஜ்ஜுகணவரின் ஆயுள் தொடர்பான அச்சம்

ஆதாரம்: காலப்பிரகாசிகை (Kalaprakasika), N. P. Subramania Iyer ஆங்கில மொழிபெயர்ப்பு, பக்கம் 75.

இவை நூல்களில் சொல்லப்பட்ட பொதுவான பலன்கள் மட்டுமே. இவற்றை மட்டும் வைத்துப் பயப்பட வேண்டாம்.

ஜோதிடர் ஆஸ்ட்ரோ சரவணன் அவர்களின் விளக்கம்

பாத ரஜ்ஜு (பாதம்)

பாத ரஜ்ஜு கால் பகுதியைக் குறிக்கிறது. இதில் புதனின் தொடர்பு சேர்ந்தால் இருவரும் புத்திசாலிகளாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை குறைவாக இருக்கும்.

ஊரு ரஜ்ஜு (தொடை)

ஊரு ரஜ்ஜுவைச் சுக்கிரனும் சனியும் குறிக்கின்றன. சுக்கிரன் சொகுசையும், சனி உழைப்பையும் குறிப்பதால், இந்த ரஜ்ஜு பொருளாதாரத்துடன் தொடர்புடையது. இருவரும் இந்த ரஜ்ஜுவில் இருந்தால் சொகுசு, உழைப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் தடை ஏற்படலாம்.

நாபி ரஜ்ஜு (வயிறு)

வயிற்றுப் பகுதிக்குக் காரகன் குரு. இது உணவுப் பழக்கத்துடன் தொடர்புடையது. இருவரும் நாபி ரஜ்ஜுவில் இருந்தால், உணவுப் பழக்கத்தில் வேறுபாடும், ஒருவர் அறிவுரையை மற்றவர் ஏற்கத் தயங்கும் போக்கும் காணப்படலாம்.

கண்ட ரஜ்ஜு (கழுத்து)

கழுத்துப் பகுதியைச் சந்திரனும் ராகுவும் குறிக்கின்றன. ஜோதிட ரீதியாக இது தொண்டை, கழுத்துப் பகுதியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இருவருக்குள் புரிதல் குறைவாக இருக்கலாம். ராகுவின் தாக்கத்தால் கோள் சொல்லுதல், குறுக்கு புத்தி போன்றவை ஏற்படலாம்.

சிரசு ரஜ்ஜு (தலை)

சிரசு ரஜ்ஜுவைச் செவ்வாயும் சூரியனும் குறிக்கின்றன. இது அகங்காரம், ரத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இருவரிடமும் ஈகோ, உணர்ச்சிவசப்படுதல், போட்டி மனப்பான்மை இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

ஆரோக – அவரோக ரஜ்ஜு: விதிவிலக்கு உண்டா?

ஒவ்வொரு ரஜ்ஜுவும் ஆரோகம் (ஏறும் வரிசை நட்சத்திரங்கள்), அவரோகம் (இறங்கும் வரிசை நட்சத்திரங்கள்) என மேலும் பிரிக்கப்படுகிறது.

ஆண் நட்சத்திரம் ஆரோகத்திலும் பெண் நட்சத்திரம் அவரோகத்திலும், அல்லது ஆண் நட்சத்திரம் அவரோகத்திலும் பெண் நட்சத்திரம் ஆரோகத்திலும் இருந்தால் பாதகமில்லை என்று வேத நூல்களின் அடிப்படைத் தத்துவம் கூறுகிறது.

ரஜ்ஜுஆரோகம் (ஏறும் வரிசை)அவரோகம் (இறங்கும் வரிசை)
சிரசு ரஜ்ஜுமிருகசீரிஷம்சித்திரை அவிட்டம்
கண்ட ரஜ்ஜுதிருவோணம் அஸ்தம் ரோகிணிதிருவாதிரை சுவாதி சதயம்
நாபி ரஜ்ஜுஉத்திராடம் உத்திரம் கார்த்திகைபுனர்பூசம் விசாகம் பூரட்டாதி
ஊரு ரஜ்ஜுபூராடம் பூரம் பரணிபூசம் அனுஷம் உத்திரட்டாதி
பாத ரஜ்ஜுமூலம் மகம் அஸ்வினிஆயில்யம் கேட்டை ரேவதி

எங்கள் ஜோதிடரின் அனுபவம்: ஆனாலும், இந்தப் பொருத்தம் மாங்கல்ய பலத்துக்கானது என்பதால் இந்த விஷயத்தில் சந்தேகத்துக்கு இடம் கொடுப்பது தவறு என்பதே ஜோதிடர் ஆஸ்ட்ரோ சரவணன் (Astro Saravanan) அவர்களின் அனுபவம். ரஜ்ஜு பொருத்தம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. விதிவிலக்கை நம்பி முடிவு எடுத்தால், பின்னர் மனதில் பயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஜோதிடர் ஆஸ்ட்ரோ சரவணன் அவர்களின் குறிப்புகள்

இருவருக்கும் ஒரே நட்சத்திரம் என்றால்?

பெண் – ஆண் இருவருக்கும் ஒரே நட்சத்திரம் என்றால் இயல்பாகவே ஒரே ரஜ்ஜுவாகத்தான் இருக்கும். ஒரே நட்சத்திரத் திருமணத்தில் நடைமுறையில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன; இதில் ஜோதிடர்களிடையே வெவ்வேறு கருத்துகள் உள்ளன. ஜோதிடம் என்பது பலருடைய ஜாதகங்களைப் பார்த்த அனுபவமும் தேவைப்படும் ஒன்று.

தினப் பொருத்தம் பொருந்தியும் ரஜ்ஜு தட்டினால்?

இதற்கு ஒரு ஆராய்ச்சி தேவைப்படுகிறது. உதாரணமாக, பெண்ணுக்கு அஸ்வினி, ஆணுக்கு ஆயில்யம் என்றால் இருவரும் பாத ரஜ்ஜு; எனவே ரஜ்ஜு பொருந்தாது. ஆனால் அஸ்வினியிலிருந்து ஆயில்யம் வரை எண்ணினால் 9-வது நட்சத்திரம் வருகிறது. முதல் பொருத்தமான தினப் பொருத்தத்தில் 9-வது நட்சத்திரம் பொருந்தும். ஆனால் ரஜ்ஜு தட்டுகிறது. எனவே இங்கு தினப் பொருத்தத்தைத் தள்ளிவிட்டு, ரஜ்ஜு பொருத்தம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

ரஜ்ஜு பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது?

ரஜ்ஜு பொருந்தவில்லை என்று தெரிந்தவுடன் பதற்றப்பட வேண்டாம். இந்த வரிசையில் பாருங்கள்:

உங்கள் ரஜ்ஜு பொருத்தத்தை இப்போதே பாருங்கள்

மணமகன், மணமகள் இருவரின் பிறந்த தேதி, நேரம், ஊர் கொடுத்தால், ரஜ்ஜு உட்பட எல்லாப் பொருத்தங்களையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம். நட்சத்திரம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; படிவமே கணக்கிட்டுச் சொல்லும்.

Groom
மணமகன் (Groom)
Bride
மணமகள் (Bride)

முதல் 3 பொருத்தங்கள் இலவசம் · முழு 12 பொருத்த அறிக்கை ₹149

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? (Rajju porutham illai endral thirumanam seiyalama?)

இது பலரது கேள்வியாக இருந்தாலும், ஆம் அல்லது இல்லை என்று ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது. பெரும்பாலான ஜோதிடர்கள் திருமணம் செய்யக் கூடாது என்பதையே உறுதியாகக் கூறுகிறார்கள். இருந்தாலும், இருவரின் ஜாதகத்தையும் பார்த்து முடிவு செய்வதுதான் உத்தமம்.

காதல் திருமணத்துக்கும் ரஜ்ஜு பார்க்க வேண்டுமா?

காதல் திருமணம் என்று தம்பதிகள் முடிவு செய்துவிட்டால், மற்ற நட்சத்திரப் பொருத்தங்கள் குறைவாக இருந்தாலும் பெரிய தடை இல்லை என்பது ஜோதிடர் ஆஸ்ட்ரோ சரவணன் (Astro Saravanan) அவர்களின் கருத்து. ஆனால் ரஜ்ஜு மாங்கல்ய பலத்துக்கானது என்பதால், அதை மட்டும் கட்டாயம் சரிபார்க்கவும். இருவரின் மன உறுதியே சரியான திருமண வாழ்க்கையை அமைத்துத் தரும். இருந்தாலும், ரஜ்ஜு பொருந்தவில்லை என்றால் ஜாதகத்தை ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது.

ரஜ்ஜு மற்ற பொருத்தங்களை விட முக்கியமானதா?

ஆம். மாங்கல்ய பாக்கியமும் ஆயுளும்தான் இந்தப் பொருத்தத்தின் மிக முக்கியமான அம்சம். சந்தோஷமான வாழ்க்கை இல்லை என்பதற்கும், வாழ்க்கையே இல்லை என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதனால்தான் நமது பாரம்பரிய ஜோதிடம் இந்தப் பொருத்தத்தை மிக முக்கியமான பொருத்தமாக வைத்திருக்கிறது.

ரஜ்ஜு பொருத்தமும் மாங்கல்யப் பொருத்தமும் ஒன்றா?

ஆம், ஒன்றுதான். குறிப்பாக, சிரசு ரஜ்ஜு மணமகனின் ஆயுளையும், கண்ட ரஜ்ஜு மணமகளின் ஆயுளையும் குறிக்கிறது.

என் நட்சத்திரம் எனக்குத் தெரியாது. என்ன செய்வது?

நட்சத்திரம் உறுதியாகத் தெரியாவிட்டால், உங்கள் பிறந்த விவரங்களைச் சரியாகக் கொடுத்தால் நாங்கள் உங்கள் சரியான நட்சத்திரத்தைக் கணித்துத் தருவோம். சரியான பிறந்த விவரம் தெரியவில்லை என்றால், பெயரை வைத்தும் நட்சத்திரத்தைக் கண்டறியலாம்; ஆனால் அப்படிப் பொருத்தம் பார்ப்பது முற்றிலும் சரியாக வராது.